சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம் இன்று வெளியிடப்பட உள்ளது.

தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை மற்றும் மக்கள் விடுதலை கட்சிக்கு தலா 1 தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில்,  கூட்டணி கட்சிகளுக்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில், ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். கொ.ம.தே.க 3 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளில் ஒன்றில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர். மேலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

இதன்மூலம் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 60 இடங்களில் 13 இடங்களில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடுகிறது.

இது தவிர திமுக மட்டும் தனியாக 187 தொகுதிகளில் களமிங்குகிறது.

இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகள் களமிறங்க உள்ள தொகுதிகள் விவரம் இன்று   சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில்  இன்று வெளியிடப்படுகிறது.