சென்னை:

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் இன்று மாலை பிரமாண்ட பேரணி நடத்த உள்ளதால், எழும்பூர் உள்பட சென்னை முழுவதும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

பேரணி நடைபெறும் எழும்பூர் பகுதியில், 2 கூடுதல் ஆணையர், 12 துணை ஆணையர்கள் உள்பட 5,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தில், இஸ்லாமியர்கள் புறக்கணிக் கப்பட்டுள்ளதை கண்டித்து,  திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள்  இச்சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பேரணிக்கு சென்னை காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதி மன்றம் நிபந்ததனையின்பேரில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி பேரணி இன்று, எழும்பூர் சி.எம்.டி.ஏ. அலுவலகம் அருகில் உள்ள சந்திப்பில் இருந்து புறப்பட்டு,  கூவம் கரையோரத்தையொட்டியுள்ள லேங்ஸ் கார்டன் ரோடு, சித்ரா தியேட்டர் சந்திப்பு வழியாக புதுப்பேட்டையை சென்றடைந்து அங்கிருந்து ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நிறைவடைய உள்ளது.

இந்த பேரணியில் அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக திரைத் துறையினர் உள்ளிட்ட 98 அமைப்புகளுக்கு தி.மு.க. சார்பில் கடிதம் எழுதி உள்ளார்.

இன்றைய பேரணியில் கட்சியினர் மட்டுமின்றி இஸ்லாமிய அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகள் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக  எழும்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

2 கூடுதல் ஆணையர், 12 துணை ஆணையர்கள் உள்பட 2 ட்ரோன்கள் மூலம் பேரணி கண்காணிக்கப்படும் என்றும், அசம்பாவிதங்களை தவிர்க்க 6 கலவர தடுப்பு வாகனங்கள், 3 தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  5,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாகவும் காவல்துறை அறிவித்து உள்ளது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை:

எழும்பூர் பகுதியில் இன்று திமுக பேரணி நடைபெறுவதையொட்டி, பொதுமக்கள்  அந்த பகுதியில் செல்வதை தவிர்ப்பது நல்லது…  திமுக தொண்டர்கள் காலை முதலே அங்கு திரண்டு வருவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன், பல இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது….