சென்னை:  டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில், திமுக கூட்டணி கட்சியினர் உண்ணா விரத போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், காவல்துறை அனுமதி மறுத்தது. இருந்தாலும், தடையை மீறி இன்று காலை  திமுக கூட்டணி கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், உண்ணாவிரதப் போராட்டத்தைத் ஏற்கனவே அறிவித்தபடி இன்று  தொடங்கியுள்ளனர். காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

போராட்டத்துக்கு   திமுக தலைவர் மு.க.ஸ்டானின் தலைமை தாங்கி நடத்தி வருகின்றார். இதில், கூட்டணி கட்சித்தலைவர்கள் வைகோ, கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன், முத்தரசன், பாலகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன், ஜவாஹிருல்லா உள்பம பல தலைவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கெண்டுள்ளனர். மேலும் ஏராளமான கட்சி  பிரமுகர்கள்  பங்கேற்றுள்ளனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், விவசாயிகளுக்கு எதிரான, மூன்று சட்டங்களுக்கு எதிராக இந்தியாவே கொந்தளித்துள்ளது என்றும், கடுமையான குளிரிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். ஆனால், விவசாயிகளை, அந்நிய கைகூளி, மாவோலிஸ்ட், தீவிரவாதி என மத்திய அரசு கொச்சைப்படுத்துவதாக குற்றம் சாட்டினார். மேலும், மத்திய அரசு பேச்சுவார்த்தை என்ற பெயரில் நாடகம் நடத்தி வருகிறது என்றும், விவசாயிகள் கோரிக்கை ஒன்றே ஒன்று தான் அது ‘இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்’ என்பது தான் என்று கூறிய ஸ்டாலின் வேளாண் சட்டத்தைத் திரும்பப்பெறும் வரையில் போராட்டம் தொடரும் என்றார்.

விவசாயிகள் வாழ்க்கை கேள்விக்குறியாக்கும் வகையில் இந்தச் சட்டங்கள் இருக்கிறன என்று கூறிய ஸ்டாலின், இதை எதிர்த்து, தற்போது இந்தியாவே கொதித்து போய் இருக்கிறது என்றும், இதனால் தலைநகர் டெல்லியே ஸ்தம்பித்திருப்பதாகவும் கூறினார்.தொடர்ந்து பேசிய ஸ்டாலின், எதற்காக இவ்வளவு அவசரம், யாரை பாதுகாக்க இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.