சென்னை:

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்று திமுகத் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி வரும் 23ந்தேதி சென்னையில் பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. திமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்ற நிலையில், இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலைசிறுத்தைகள்,கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட திமுக கூட்டணி கட்சிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டம் முடிவுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்,  அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் 23ந்தேதி காலை 10மணி அளவில், சட்டத்திருத்த எதிர்ப்பு பேரணி என்ற பெயரில் மிகப்பெரிய பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.