டெல்லி: கொரோனா வைரஸ்  அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்று பாராளுமன்றம்  கூடியது. முன்னதாக, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், விசிக கட்சகிளின்  எம்.பிக்கள்  நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு தமிழகம் உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், மத்தியஅரசு, விடாப்பிடியாக தேர்வை நடத்தி வருகிறது.

மத்திய பாடத்திட்டத்தின்படி இந்த தேர்வு நடத்தப்படுவதால், தமிழக மாணவர்கள், அதை எதிர் கொள்ள முடியாத நிலை தொடர்ந்து வருகிறது.

இதன் காரணமாக, ஆண்டு தோறும் பல தமிழக மாணவர்கள் தற்கொலை முடிவை நாடும் அவலமும் தொடர்ந்து வருகிறது. நீட் தேர்வு பயத்தால், நேற்று முன்தினம் மேலும் 3 மாணாக்கர்கள்  தற்கொலை செய்துகொண்டனர். இது தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நீட் தேர்வை வலியுறுத்தி, இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் எம்.பி.க்கள் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி எம்.பி.க்கள் முழக்கங்கள் எழுப்பினர். நீட் தேர்வை கைவிட வலியுறுத்தும் பதாகைகளையும் எம்.பி.க்கள் கைகளில் ஏந்தி இருந்தனர்.

இதுகுறித்து கூறிய திருச்சி சிவா, தமிழகத்தில் மொத்தம் 11 மாணவர்கள் நீட் தேர்வுகளால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த போதும் கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை நீட் தேர்வு தகர்த்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.