காஷ்மீருக்கு மக்களவை பிரதிநிதிகளை அழைத்துச் செல்ல திமுக கோரிக்கை

சென்னை

திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் தங்கள் மக்களவை பிரதிநிதிகளைக் காஷ்மீர் மாநிலத்துக்கு அழைத்துச் செல்ல மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.

கடந்த திங்கட்கிழமை காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370 ஐ நீக்கம் செய்யும் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது. அந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த மசோதாவுக்குக் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து இக்கட்சிகள் சென்னையில் நேற்று கூட்டம் ஒன்றை நடத்தியது.

இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக, மற்றும் விசிக ஆகிய கட்சிகள் கலந்துக்கொண்டன. இதில் முக்கியமான உறுப்பினராக அதிமுக சார்பில் தேர்தலில் வெற்றி பெற்ற தமிமூன் அன்சாரி கலந்துக் கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் விதி எண் 370 நீக்க நடவடிக்கையை எதிர்த்து தீர்மானம் இயற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தில், “உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே இது குறித்துப் பதியப்பட்ட வழகின் தீர்ப்பு வரும் வரை மத்தியரசு காத்திருந்திருக்கலாம். இது நாட்டின் ஒற்றுமைக்கு  எதிரானது. காஷ்மீருக்கு ஏற்பட்ட இந்த நிலை மற்ற மாநிலங்களுக்கு ஏற்ப்ட வாய்ப்புண்டு. மத்திய அரசு மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளது.

உச்சநீதிமன்றம் விதி எண் 370 நிரந்தரமானது என அறிவித்துள்ளபோது அதை மத்திய அரசு மதிக்காமல் நீக்கி உள்ளது. பாஜகவுக்குப் பெரும்பான்மை உள்ளதால் மசோதாவை நிறைவேற்றி உள்ளது. இது நாட்டுக்கு அபாயமானது. காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். காஷ்மீர் பகுதியில் சகஜத் தன்மையை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்,

காஷ்மீரை இணைக்கும் போது சர்தார் படேல் கொடுத்த வாக்குறுதியை மத்திய அரசு மீறக்கூடாது. இந்தியாவுக்கு அபாயம் ஏற்படாத வகையில் காஷ்மீரில் உள்ள  ராணுவத்தினர் திரும்ப அழைக்கப்படவேண்டும். அத்துடன் காஷ்மீரில் தற்போது நிகழும் நிலை குறித்த உண்மைகளை அறிய மக்களவை பிரதிநிதிகளைக் காஷ்மீருக்கு மத்திய அரசு அழைத்துச் செல்ல வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.