தி.மு.க.,அ.தி.மு.க.ஆகிய இரு கட்சிகளையும் கிறு கிறுக்க வைத்து விட்டார்-விஜயகாந்த்.இரு கட்சிகளுடனும் ஒரே சமயத்தில் தொகுதி பேரம் நடத்தி வருகிறது –அவரது கட்சி.

புதிய விருந்தினரை எதிர்பார்த்து ஏற்கனவே பந்தியில் உள்ள விருந்தாளிகளுக்கு இலை போடாமல் காக்க வைத்துள்ளது –தி.மு.க..இதன் கூட்டணி கட்சிகள் ஒரு ரவுண்டு பேசி முடித்து விட்டார்கள்.

ம.தி.மு.க.நான்கு தொகுதிகளுக்கு ‘லிஸ்ட்’ கொடுத்து இரண்டு கண்டிப்பாக வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்கிறது. விருதுநகரில் வைகோவுக்கும், ஈரோட்டில் கணேசமூர்த்திக்கும் டிக்கெட் கோருகிறது-மதி.மு.க.

ம.தி.மு.க.வுக்கு 2 கொடுத்தால் எங்களுக்கும் 2 வேண்டும் என்பது இரண்டு இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் நிலைப்பாடு.

இதனை ஏற்க மறுக்கும் தி.மு.க. கீழ்க்கண்ட வாதத்தை முன் வைக்கிறது:

‘’ம.தி.மு.க.வுக்கு முன்னர் 4 தொகுதிகளை ஒதுக்கினோம். அதுபோல் இடதுசாரிகளுக்கும் 2 இடங்கள் கொடுத்தோம். ஆனால் இப்போது அந்த கட்சிகளின் வாக்கு சதவீதம் 1% க்கும் குறைவாகவே உள்ளது. .ம.தி.மு.க.வுக்கு 2 , இடதுசாரிகளுக்கு ஆளுக்கு ஒன்று,விடுதலை சிறுத்தைகளுக்கு ஒன்று என்பதே இப்போது சாத்தியம் ‘’என்கிறது  அறிவாலய வட்டாரம்.

வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி , தி.மு.க.விடம் ஒரு தொகுதி கேட்டது. ‘’சட்டசபை தேர்தலில் தருகிறோம். இப்போது எங்களை ஆதரியுங்கள்’’ என்கிறது தி.மு.க. ஆனால் அதனை ஏற்க வேல்முருகன் மறுத்து விட்டார்.

தே.மு.தி.க.நிலை என்ன?

இரு திராவிட கட்சிகளும்  தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளை கொடுக்க –ஒப்புக்கொண் டுள்ளன.அந்த கட்சியிடம் உள்ள சுமார் 3 சதவீத ஓட்டுகள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதால் –தாராளம் காட்டுகின்றன- இரு பெரிய கட்சிகளும். ஆனால் விஜயகாந்திடம் இருந்து பதில் வரவில்லை.

இதனிடையே – மற்றொரு கூத்தும் தி.மு.க.தரப்பில் அரங்கேறியுள்ளது.

தே.மு.தி.க.வுக்கு கொடுப்பதற்காக- காங்கிரசுக்கு அளித்த 10 தொகுதிகளில் இரண்டை  ‘கடன்’ கேட்டுள்ளது-  தி.மு.க.’ சட்டசபை இடைத்தேர்தலிலோ அல்லது அடுத்த தேர்தலிலோ கடனை கழித்து கொள்ளலாம்’’ என்கிறது தி.மு.க.

‘’எங்கள் கட்சியின்  கோஷ்டி தலைவர்களுக்கே எப்படி – இந்த 10 சீட்டுகளை பிரித்து கொடுப்பது என்று குழப்பத்தில் இருக்கிறோம். ஒரு சீட் கூட திருப்பி  கொடுக்க வாய்ப்பு இல்லை’’ என்று முகத்தில் அடித்தால் போல் கூறி விட்டது- காங்கிரஸ்.

தே.மு.தி.க.வின் நிலை தெரிந்த பிறகே இரு பிரதான கூட்டணிகளிலும்

-யார் ? யார் உள்ளனர்? எத்தனை இடங்கள் என்பது தெளிவாகும்.

-பாப்பாங்குளம் பாரதி