சென்னை

நேற்று நடந்த வீடியோ கான்ஃபரன்சிங் கூட்டத்தில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டும் திட்டத்தைக் கைவிடுமாறு திமுக வலியுறுத்தி உள்ளது.

நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி மாநில அமைச்சர்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் கூட்டங்கள் நடத்தி வருகிறார்.  நேற்று எதிர்க்கட்சிகளுடன் ஒரு வீடியோ கான்ஃபரன்சிங் கூட்டத்தை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் திமுக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் டி ஆர் பாலு கலந்துக் கொண்டார்.  அப்போது அவர் பிரதமரிடம்,”கொரோனா நிவாரண நிதியாக வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு ரூ.5000 மதிப்புள்ள சமையல் எரிவாயு சலுகை வழங்கப்பட்டுள்ளது.  அதைப் போல் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.10000 ரொக்கம் அளிக்க வேண்டும்.  அதை இரு தவணைகளாக அளிக்கலாம்.

கொரோனா சிகிச்சை மற்றும் நிவாரண நிதிக்காக அதிக அளவில் நிதி தேவையாக உள்ளது. எனவே அரசியலை மனதில் கொள்ளாமல் மத்திய அரசு புதிய பாராளுமன்றக் கட்டிடம் கட்டும் தேவையற்ற திட்டத்தைக் கைவிட வேண்டும்.  இதனால் ரூ.25000 கோடி மிச்சமாகும்.  அந்த பணத்தை கொரோனா சிகிச்சை மற்றும் நிவாரண செலவுகளுக்குப் பயன்படுத்த முடியும்.

ஈரான் நாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 300 மீனவர்கள் உள்ளனர்.  தற்போது ஈரானில் கொரோனா தொற்று அதிகமாகி வருவதால் அவர்கள் உயிருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.  அவர்களைப் பத்திரமாகத் திரும்ப அழைத்து வரும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து டி ஆர் பாலு செய்தியாளர்களிடம், “நான் கூறியவற்றைப் பிரதமர் மோடி முறிப்பு எடுத்துக் கொண்டார்.  விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கட்சி பேதமின்றி ஒத்துழைப்பு அளிக்க உள்ளதாக நான் தெரிவித்துள்ளேன்” எனக் கூறினார்.