சென்னை: வாக்குப்பதிவு இயந்திரங்களை முதற்கட்டப் பரிசோதனை செய்வது தொடர்பான சில குறைபாடுகளை தேர்தல் கமிஷனுக்கு சுட்டிக் காட்டியுள்ளது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரத்தொடங்கியுள்ளன. இந்நிலையில், அவற்றை முதற்கட்டமாகப் பரிசோதனைகள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சில இடங்களில், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் இல்லாமலேயே அந்தப் பணி நடைபெற்றதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில்தான், இந்த விஷயத்தை தேர்தல் கமிஷனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது திமுக.

இனிமேல் நடைபெறுகின்ற அனைத்துவித பரிசோதனைகளும் சரியான முறையில் நடைபெறுவதை தேர்தல் கமிஷன் உறுதிசெய்ய வேண்டுமென திமுக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திமுக தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; உயர்சக்தி கொண்ட ஜேம்மர்கள், 1000 மீட்டர்களுக்கும் குறையாத சுற்றளவில் வலுவான அறைகள், எண்ணிக்கை மையங்கள் மற்றும் வாக்குப்பதிவு மையங்களில் நிறுவப்பட வேண்டும்.

அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. இந்நிலையில், சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட வ‍ேண்டும். வெறுப்பு பிரச்சாரம் தடை செய்யப்பட வேண்டும். காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வதானது சரியான முறையில் நடைபெற வ‍ேண்டும்.

உயர் காவல்துறை அதிகாரிகளை, இடமாற்றம் என்ற பெயரில் அருகிலுள்ள இடங்களுக்கே மாற்றாமல், தொலைதூரப் பகுதிகளுக்கு மாற்ற வேண்டும். ஆளும் அதிமுக, வாக்குகளுக்கு பணம் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதால், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.