‘’ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே ‘’என்ற பழமொழிக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்- விஜயகாந்த் மனைவி பிரேமலதா.

தே.மு.தி.க.என்ற கட்சியை கட்டமைத்ததில் பெரும் பங்கு அவருக்கு உண்டு. அதே போல் அந்த கட்சியை காலி செய்த  புண்ணியமும் பிரேமலதாவையே சேரும்.

‘லட்டர் பேடில்’ தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் என பெயர் பொரிக்கப்பட்டிருந்தாலும், நிஜத்தில் அதன் தலைவராக செயல்பட்டவர் பிரேமலதா தான்.

யாருடன் கூட்டணி, யாருக்கு சீட், எந்த தொகுதி என அனைத்திலும் அவரது பங்களிப்பே பிரதானமாக இருந்தது. இதனால் விஜயகாந்தை தொண்டர்கள்,நிர்வாகிகள் மட்டுமின்றி –தோழமை கட்சி தலைவர்களும் சுலபமாக நெருங்க முடியவில்லை.

இதனால் தான் மு.க.ஸ்டாலினுக்கும், விஜயகாந்துக்கும் இடையே  கடந்த 8 ஆண்டுகளாக பகை வளர்ந்து வந்தது. 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைக்க விரும்பினார் –ஸ்டாலின்.

மையமாக தலையசைத்து வைத்த விஜயகாந்த் தரப்பு கடைசி நேரத்தில் –பிரேமலதா விரும்பிய படி. அ.தி.மு.கவுடன் கூட்டணி  சேர்ந்து- தி.மு.க.வை மூன்றாம் இடத்துக்கு தள்ளியது.

கடந்த தேர்தலிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான்.சட்டசபையிலேயே ஜெயலலிதாவை , விஜயகாந்த் முறைத்து கொண்டதால்-  அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களை ஒருவர் பின் ஒருவராக அ.தி.மு.க. இழுத்தது.

நிலைமையின் விபரீதம் உணர்ந்த கேப்டன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க.வுடன் போகலாம் என யோசனை சொல்ல , பிரேமலதாவோ- மக்கள் நல கூட்டணிக்குள் தே.மு.தி.க.வை தள்ளினார்.

விஜயகாந்தே அந்த தேர்தலில் டெபாசிட் இழக்க- தே.மு.தி.க.வின் வாக்கு சதவீதம் 10 % -ல் இருந்து 2 % ஆக சரிந்தது. 1% வாக்குகளில்  ஆட்சி அமைக்கும் வாய்ப்பை தவற விட்டது தி.மு.க. இதற்கு காரணம் விஜயகாந்தே என ஆத்திரம் அடைந்த ஸ்டாலின் –சரியான சந்தர்ப்பத்துக்கு காத்திருந்தார்.

நேற்று அந்த சந்தர்ப்பம் கிடைத்தது.

‘’7 லோக்சபா + ஒரு ராஜ்யசபா + கேஷ் என  அ.தி.மு.க.தரப்புடன் பேரம் பேசி வந்த தே.மு.தி.க. அதே நேரத்தில் தி.மு.க,வுடனும் பேசிக்கொண்டிருந்தது.

அ.தி.மு.க.இதனை சகித்து கொண்டது. தி.மு.க.வால் பொறுக்க முடியவில்லை.

நேற்று பிற்பகல் மத்திய அமைச்சர் பியூஷ்கோயலுடன் ,விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷ் பேசிக்கொண்டிருந்த அதே நொடியில் –தி.மு.க.பொருளாளர் துரைமுருகனுடன் தே.மு.தி.க.வின் இன்னொரு குழு பேச்சு நடத்தியது.

அங்கே ..இங்கே விசாரித்த துரைமுருகன் – தே.மு.தி.க.’டபுள் கேம்’ ஆடுவதை கண்டு பிடித்து –ஊடகங்களுக்கு செய்தியை கசிய விட்டதாக தெரிகிறது.

இதனால் துரைமுருகன் வீட்டை ஊடக ஆட்கள் முற்றுகையிட-

அவர்-உண்மையை போட்டு உடைத்து விட்டார்.

செவ்வாய்கிழமை அன்று தன்னுடன் சுதீஷ் தொலைபேசியில் பேசியது..சற்று முன்பு தே.மு.தி.க.ஆட்கள் தன்னுடன் பேசி கூட்டணிக்கு கெஞ்சியது என எல்லா விஷயங்களையும் அம்பலப்படுத்த –

தே.மு.தி.க.வின் இரட்டை வேடம் உலகம் முழுவதும் பகிரங்கமானது.

தே.மு.தி.க.வால் இரு தேர்தல்களில் ஏமாற்றப்பட்ட தி.மு.க. -8 வருட பகையை சில நொடிகளில்  தீர்த்து கொண்டது.

விஜயகாந்த் கட்சியின் லட்சணத்தை தி.மு.க. தோலுரித்ததுடன்- கூட்டணி கதவையும் சாத்தி விட்டது.

இனி என்ன நடக்கும்?

அ.தி.மு.க. கொடுப்பதை தான் இனி தே.மு.தி.க. வாங்கி கொள்ள வேண்டும்.கரன்சிக்கு வாய்ப்புகள் இல்லை.

பா.ம.க.வை அதிகமாகவே திட்டி தீர்த்து விட்டதால் அந்த கட்சியின் வாக்குகள்- விஜயகாந்த் கட்சிக்கு கிடைக்கப்போவதில்லை.

அ.தி.மு.க. கூட்டணி அமையா விட்டால்-கமல் ,டி.டி.வி.தினகரன்,சரத்குமார் போன்றோருடன் பேசுவார்.அவர்கள் முகம் சுழிக்கும் பட்சத்தில்- தனிக்கடை விரிக்க வேண்டிய தான்.

துரைமுருகன் பொறியில் சிக்கி- நம்பகத்தன்மையை இழந்து நடுநிலையாளர்களின் வெறுப்பையும் சம்பாதித்து கொண்ட தே.மு.தி.க.வுக்கு ஓட்டுப்போடபோவது யார்?

இந்த கேள்வியை  பிரேமலதாவிடம் தான் கேட்க வேண்டும்  என்று புலம்புகிறார்கள்-அந்த கட்சியில் எஞ்சி இருக்கும் அப்பாவி தொண்டர்கள்.

—பாப்பாங்குளம் பாரதி