நீட் தேர்வுக்கு தமிழகம் முழுதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரசியல் கட்சிகள் பலவும் அறிக்கைகள் விடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

மாணவி அனிதாவுடன் எஸ்.எஸ்.சிவசங்கர்

இந்த நிலையில் தி.மு.க.வின் அரியலூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ். எஸ். சிவசங்கர், முகநூலில் நீட் தேர்வுக்கு எதிராக வாளைச் சுழற்றி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தனது குன்னம் தொகுதியைச் சேர்ந்த அனிதா என்ற ஏழை தலித் மாணவி பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வு காரணமாக மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத சோகத்தை பதிந்திருந்தார் எஸ். எஸ். சிவசங்கர்.

மாணவி அனிதாவின் குடும்பச் சூழல், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் அவர்  எடுத்த மதிப்பெண்கள், +2 மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடந்திருந்தால்  அவருக்கு மருத்து படிப்பில் இடம் கிடைத்திருக்கும் சூழல் ஆகிவற்றை தெளிவாக, மனதில் தைக்கும்படி விளக்கி இருந்தார்  எஸ். எஸ். சிவசங்கர்.

அதே போல நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அருள் கார்த்திக் என்ற மாணவர் பற்றியும் எழுதினார்.

அதோடு, நீட் தேர்வை எதிர்த்து இந்திய குடியரசு தலைவருக்கு ஒரு கோடி அஞ்சல் அட்டை மற்றும் மின்னஞ்சல் அனுப்பும் போராட்டத்தை தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கும் நிலையில், அதற்கான கடித மாதிரியையும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு அனைவரும் குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்புங்கள் என்று கோரியிருக்கிறார்.

(கடித மாதிரி:

To

His Excellency
The President of India
Rashtrapati Bhavan
New Delhi 110 004

Respected Sir,

Request your goodself to kindly give your assent for the two bills – Tamil Nadu Admissions to Post Graduate Courses in Medicine and Dentistry Bill, 2017 and the Tamil Nadu Admissions to MBBS and BDS Courses Bill, 2017 – unanimously passed by Tamil Nadu Assembly on 31.1.2017 to exclude the State from NEET examination that will protect the present policy of Tamil Nadu State for admission to Medical Colleges under the State quota.

Yours sincerely

(உங்கள் பெயர் மற்றும் முகவரியை எழுதவும்)

இந்த நிலையில் எஸ். எஸ். சிவசங்கர்,  “நீட் தேர்வால், எம்பிபிஎஸ் வாய்ப்பை இழந்தோர்” என்ற பக்கத்தை உருவாக்கி இருக்கிறார். இதில்  பாதிக்கப்பட்ட மாணவர்களின் தகவல்களை பகிர்ந்திட கோரியிருக்கிறார்.

ஆயிரக்கணக்கானவர்கள் இவரது “நீட் எதிர்ப்பு கோரக்கைக்கு” விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்..  பகிர்ந்தும் இருக்கிறார்கள்.  நீட் தேர்வுக்கு எதிராக பல தரப்பினரும் போராடி வரும் நிலையில், எஸ். எஸ். சிவசங்கரின் டிஜிட்டல் போரட்டமும் அதற்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.