“கம்யூனிஸ்டுகளுக்கு இவ்வளவு ஆகாது” – திமுக முகாமில் சலசலப்பு!

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இழுபறியாக இருந்து வருகிறது. இரண்டு முஸ்லீம் கட்சிகளுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் மட்டுமே தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, மதிமுக மற்றும் கம்யூன்ஸ்டு கட்சிகள் முரண்டு பிடித்து வருகின்றன.

இதுதொடர்பாக, திமுக முகாமில் பேச்சு கொடுத்தபோது, அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து சற்று காட்டமாக பேசினார்கள். அவர்கள் கூறியதாவது, “கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது, மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு, 1% ஓட்டுகள்கூட வாங்க முடியாமல் படுதோல்வியடைந்தார்கள்.

ஆனால், எங்கள் தோல்விக்கு காரணமானவர்கள் என்பதையும் நாங்கள் மறந்து, அவர்களுக்கு 2019 நாடாளுமன்ற தேர்தலில் தலா 2 இடங்களை வழங்கினோம். கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது, ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர முயன்ற கம்யூனிஸ்டுகள் எந்தளவு அவமானப்படுத்தப்பட்டார்கள் என்பதை அரசியல் உலகம் அறியும். தா.பாண்டியன் கதறாத குறையாக அறிக்கை விட்டதையும் மறந்துவிடலாகாது

2019 மக்களவைத் தேர்தலில், அவர்கள் விரும்பிய கோவை, திருப்பூர், மதுரை மற்றும் நாகை தொகுதிகளையே வழங்கினோம். எதிலும் அவர்களுக்கு குறைவைக்கவில்லை.

அந்த தேர்தலில், மேற்குவங்கம், கேரளாவில்கூட அவர்கள் துடைத்தெறியபட்டபோது, தமிழ்நாடு மட்டுமே அவர்களின் மானம் காத்தது. எனவே, அதையெல்லாம் அவர்கள் இப்போது நினைத்துப் பார்க்க வேண்டும். அதைவிடுத்து, ‍தேவையில்லாமல் முரண்டுபிடிப்பது நல்லதல்ல! எங்கள் கூட்டணியைவிட்டால், கடந்த தேர்தல்போல், சட்டமன்றத்தில் அவர்கள் பூஜ்யமாகத்தான் இருக்க வேண்டும். கமலுடன் சேர்ந்து அசிங்கப்பட வேண்டுமென்று நினைத்தால், அது அவர்களின் விருப்பம்” என்றனர் அவர்கள்.