Random image

 மாநில சுயாட்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ராகுல் காந்திக்கு தி.மு.க. அழைப்பு

திமுக சார்பில் சென்னையில் நடைபெறும் மாநில சுயாட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாடு மாநாட்டில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மாநிலங்களின் சுயாட்சி உரிமை பறிபோவதாக எதிர்க்கட்சிகள்   குற்றம்சாட்டி வருகின்றன. பாஜக ஆளாத மாநிலங்களில், அரசின் செயல்பாடுகளில் ஆளுநரின் தலையீடு அதிகரித்துள்ளதாகவும் அவர்கள்  புகார் எழுந்துள்ளது.

மேலும், மாநிலத்தில் சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் இருக்க வேண்டும் என தேசிய வளர்ச்சி கவுன்சிலில் முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியுள்ளார். தற்போது மாநில சுயாட்சி நீர்த்துவிட்டதாக கூறியுள்ள திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், அதனை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மாநில சுயாட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாடு என்ற தலைப்பில் வருகிற ஆகஸ்ட் 30ம் தேதி சென்னையில் திமுக சார்பில் பிரமாண்ட மாநாடு நடத்தப்பட உள்ளது. இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் மூத்த தலைவர்களான சரத்பவார், உமர் அப்துல்லா, மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்படடவுள்ளதாக திமுக  தலைமை கழகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று  டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா நேரில் சென்று அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து அவர் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருக்கிறார்.