10ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் – 5 நாட்களுக்குள் ஏகப்பட்ட வேலைகள்!

2011 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல், மார்ச் 10ம் ‍தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் முழுமையாக 4 நாட்களே இருக்கும் நிலையில், திமுக முகாமில் ஏகப்பட்ட வேலைகள் பாக்கியுள்ளது.

இந்த அறிவிப்பு, முரண்டு பிடிக்கும் கூட்டணி கட்சிகளுக்கு விடப்பட்ட ஒரு மிரட்டலாகவும் பார்க்கப்படுகிறது.

திமுக முகாமில் ஏகப்பட்ட கூட்டணிக் கட்சிகள் இருக்கும் சூழலில், மார்ச் 5ம் தேதி நண்பகல் வரை, மொத்தமே 3 கட்சிகளுடன் மட்டும்தான் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இன்னும் பல கட்சிகளுடன் எண்ணிக்க‍ை உடன்பாடு எட்டப்பட்டாக வேண்டும்.

மேலும், குறைந்தபட்சம் நாளைக்குள் அந்த வேலைகள் முடிய வேண்டும். அப்படி முடிந்தால்தான், யார் யாருக்கு என்னென்ன தொகுதி என்ற இதைவிட பெரிய சிக்கலுக்கு தீர்வுகாண முடியும். அதிக கட்சிகள் இடம்பெற்றுள்ள ஒரு கூட்டணியில், அது ஒரு பெரிய பஞ்சாயத்து என்பதில் சந்தேகமில்லை!

எனவே, இவை அனைத்தையுமே வெறும் 4 நாட்களில் முடித்து, 10ம் தேதியே வேட்பாளர் பட்டியலை அறிவித்தாக வேண்டும். அதிமுக முகாமில், விரைவாகவே வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிடும் என்ற சூழலில், திமுக 10ம் தேதிக்குமேல் நாட்களைக் கடத்த முடியாது என்ற நிலை!

எனவேதான், கூட்டணி கட்சிகளுக்கான இந்த எச்சரிக்க‍ை அறிவிப்பு!