கோமா நிலைக்கு சென்றார் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்….

சென்னை:

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நிலை கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக  கூறப்படுகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் இருந்து திமுக முக்கிய பிரதிநிதிகள் சென்னை நோக்கி விரைகின்றனர்.

தற்போது 98 வயதாகும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மீண்டும் நலக்குறைவு காரணமாக கடந்த 24ந்தேதி இரவு 8.15 மணிக்கு  சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர் சிகிச்சையில் இருக்கும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்றும், அன்பழகனுக்கு செயற்கை சுவாசக் கருவி வைத்திருப்பதாக கூறப்படுகிறது., நேற்று இரவு முதல் கண் திறக்கவில்லை, அவரது உடல்நிலை கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை  வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பேராசிரியர் அன்பழகன் உடல்நிலை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின்  நேற்றும், இன்றும் மருத்துவமனைக்கு சென்று பார்த்து வருகிறார்.  இந்த நிலையில் இன்று காலை முதலே, திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்கு அவசரம் அவசரமாக விரைந்து வந்து பார்த்து செல்கின்றனர்.

இன்று காலை திருச்சியில் இருந்து சென்னை வந்த திமுக முதன்மை செயலாளர் நேரு அறிவாலயம் வழியே சென்றாலும், அறிவாலயத்துக்கு செல்லாமல் நேராக மருத்துவமனைக்கு சென்று அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்து வந்தாகவும்,  திமுக பொருளாளர் துரைமுருகன் உள்பல திமுக முக்கிய நிர்வாகிகள் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று அன்பழகன் உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர்.

இதற்கிடையில்,  உடல்நிலை   கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் இருந்து திமுக முக்கிய பிரதிநிதிகள் சென்னை நோக்கி வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன….