மேகதாது அணை விவகாரம்: நாளை அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுகிறது தி.மு.க.

மேகதாது அணைக்கட்டு விவகாரம் தொடர்பாக நாளை அனைத்துக்கட்சி கூட்டத்தை தி.மு.க. கூட்டியுள்ளது.

குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.  ஆனால் மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறையும் என்பதாலும் இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்பதாலும் தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துவிட்டது.

இதையடுத்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். அதில், மேகதாது அணை கட்ட கர்நாடக மாநிலத்திற்கு அனுமதி  அளிக்கக்கூடாது  என்றும்  திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு அளித்த அனுமதியை திரும்பப்பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட இருப்பதாக தி.மு.க. அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக விவசாயத்திற்கும் மக்களின் குடிநீர் தேவைக்கும் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும் வகையில் மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகாவிற்கு மத்திய பாஜக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் எந்தெந்த கட்சிகள் பங்குபெறும் என அறிவிக்கப்படவில்லை.