திமுக-காங். கூட்டணியில் சேர கமலுக்கு அழைப்பு விடும் கே.எஸ்.அழகிரி

சென்னை:

பாராளுமன்ற தேர்தலில், திமுக-காங். கூட்டணிக்கு  மக்கள் நீதி மய்யம் வர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைமையால், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமனம் செய்யப்பட்ட கே.எஸ்.அழகிரி நேற்று மாலை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக  சென்னை தியாகராய நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்திற்குச் சென்று மரியாதை செலுத்திய  கே.எஸ். அழகிரி  செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,  ‘நாட்டின் இறையாண்மை, மதச்சார்பின்மையைக் காப்பாற்றுவது தான் திமுக, காங்கிரஸ்  கூட்டணி கட்சிகளின் நோக்கமாக உள்ளது. எனவே, திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

சமீப காலமாக திமுக, அதிமுக கட்சிகளை ஊழல் கட்சிகளை என்று சரமாரியாக வசை பாடி வரும், கமல்ஹாசனுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்  அழகிரி அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.