அமித்ஷா பங்கேற்பதால் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மாற்றம் வராது: திருநாவுக்கரசர்

சென்னை:

றைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அமித்ஷா கலந்துகொள்வதால், திமுக காங்கிரஸ் கூட்டணியில் மாற்றம் வராது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

கருணாநிதியின் நினைவேந்தல் வரும் 30ந்தேதி சென்னை நந்தனத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் திமுக கூட்டணி கட்சியான பாஜக தற்போது திமுகவுக்கு எதிரான போக்கில் உள்ளது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த அமித்ஷாவுக்கு எதிராக கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது மத்திய அமைச்சர்கள், மாநில பாஜ தலைவர்கள் கருணாநிதி குறித்து நலம் விசாரித்து சென்றனர். அமித்ஷாவும் ஸ்டாலினுடன் போனில் நலம் விசாரித்தார்.

மேலும், கருணாநிதி மறைவின்போதும் பிரதமர் மோடி உள்பட பல பாஜ தலைவர்கள் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன் காரணமாக பாஜக மீதான திமுக எதிர்ப்பு உணர்வு குறைந்து வருவதாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில்,  கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா பங்குபெற அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று அமித்ஷா கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டது. இதனால் பாஜவுக்கு எதிரான மனநிலையில்  இருந்து  திமுக விலகி வருவதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டாலும் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மாற்றம் வராது  என்றார். கலைஞர் நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்றாலும், பங்கேற்காவிட்டாலும் காங்கிரஸ் கட்சிக்கு எந்த அக்கறையோ, கவலையோ இல்லை என்றார்.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடிக்கு நிவாரண பொருட்கள் சேமிக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பப்பட்டு உள்ளதும் என்றும் கூறினார்.நிவாரணத்திற்கு உலக நாடுகள், இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில்,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் அமித்ஷா கலந்துகொள்ள மாட்டார் என்று டிவிட் செய்துள்ளார்.