கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை: டி.ஆர் பாலு தலைமையிலான குழுவை அமைத்தது திமுக

சென்னை: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட டிஆர் பாலு தலைமையிலான குழுவை திமுக அமைத்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு மே 2ம் தேதி தேர்தல் முடிவுகளும் வெளியாகும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, மார்ச் 7ம் தேதியன்று நடைபெறுவதாக இருந்த திமுக பொதுக்குழு கூட்டமும், மார்ச் 14ம் தேதி திருச்சியில் நடைபெற இருந்த மாநில மாநாடும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்டு உள்ளார். அதேபோன்று மற்றொரு அறிவிப்பையும் அவர் வெளியிட்டு உள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திடும் குழுவையும் அறிவித்துள்ளார்.

கட்சியின் பொருளாளர் டிஆர் பாலு தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவரது தலைமையில் உள்ள இந்த குழுவில் உறுப்பினர்களாக கேஎன் நேரு, இ. பெரியசாமி, க. பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்எஸ் பாரதி, எ. வ. வேலு ஆகியோர் இடம்பெற்று உள்ளதாக பொது செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.