ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாலை 7:20 மணி நிலவரப்படி மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 91,975 பதவிகளை நிரப்புவதற்காக இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 27ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 76.19 % வாக்குகளும், டிசம்பர் 30ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகளும் பதிவாகின. இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாலை 7:20 மணி நிலவரப்படி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கான தேர்தலில் திமுக கூட்டணி 613, அதிமுக கூட்டணி 509, அமமுக 38 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. திமுக தனித்து 551 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 34, இந்தியன் கம்யூனிஸ்ட் 14, மதிமுக 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4, விடுதலை சிறுத்தைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக தனித்து 432 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான பாமக 34, தேமுதிக 21, பாஜக 20, தமிழ் மாநில காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஊராட்சி ஒன்றியத்திற்கான தேர்தலில் 3வது பெரிய கட்சியாக டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 38 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மாவட்ட ஊராட்சி வார்டு பதவிக்கான தேர்தலில் திமுக கூட்டணி 155 இடங்களிலும், அதிமுக கூட்டணி 152 இடங்களிலும், அமமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.