அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது திமுக வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் அவகாசம்

சென்னை:

ள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகார் குறித்து விசாரிக்க கோரிய திமுக வழக்கில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருப்பவர் எஸ்.பி.வேலுமணி. உள்ளாட்சித் துறையில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக கூறி,  ஊழல் தடுப்பு மற்றும் கண் காணிப்புத் துறை இயக்குநரிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த மாதம் 10ந்தேதி  புகார் மனு கொடுத்தார். ஆனால், புகார் மனு மீது லஞ்ச ஒழிப்பு துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்,

இந்த வழக்கு  நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நடைபெற்ற விவாதத்தின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை  சார்பாக ஆஜரான வழக்கறிஞர், கேள்வி எழுப்பிய நீதிபதி,  அமைச்சர் மீதான புகார் குறித்து விசாரணை செய்ய ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டுமா அல்லது தலைமைச்செயலாளரிடம் அனுமதி பெற வேண்டுமா என கேள்வி எழுப்பினர். இதுகுறித்து பதில் அளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில்  அவகாசம் கோரப்பட்டது.

அதைத்தொடர்ந்து  வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு நீதிபதி தள்ளிவைத்தார்.