திருச்சி : திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கருத்து கேட்பு கூட்டம் திருச்சியில் இன்று  தொடங்கியது. இதில், திமுக உள்பட கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் தங்களது கருத்துக்கள் தொடர்பான மனுக்களை வழங்கினர்.

2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத்‌ தேர்தலுக்கான தேர்தல்‌ அறிக்கையினைத்‌ தயாரிக்க பிரத்யேக குழுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் 11ந்தேதி அறிவித்தார்.  இந்த குழுவுக்கு தலைமையாக டி.ஆர்‌. பாலு (திமுக பொருளாளர்)  நியமிக்கப்பட்டு உள்ளார். அவருடன்,  சுப்புலட்சுமி ஜெகதீசன்‌, (துணை பொதுச்செயலாளர்‌), ஆ.இராசா (துணைப்‌ பொதுச்செயலாளர்‌),, அந்தியூர்‌ ப.செல்வராஜ்‌ (துணைம்‌ பொதுச்செயலாளர்‌), கனிமொழி, ம்‌. (இருக, மக்களவைகுமு துணைத்‌ தலைவர்‌), திருச்சி சிவா, (கழக கொள்கைப்‌ பரப்புச்‌ செயலானர்‌), டி.கே.எஸ்‌. இளங்கோவன்‌, (செய்தி தொடர்புச்‌ செயலாளர்‌), பேராசிரியர் அ. இராமசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழு மாவட்டம்தோறும் சென்று கட்சியினர், பொதுமக்களிடையே கருத்துக்களை கேட்டு வருகிறது. அதனப்டி, இன்று  திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கருத்து கேட்பு கூட்டம்,  திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தொடங்கியது.  திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில்,   இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி மாவட்டத் தலைவர் எம்.ஏ.எம்.நிஜாம், மாவட்டச் செயலாளர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான், மாணவர் அணி மாநில பொதுச் செயலாளர் திருச்சி ஏ.எம்.எம்.அன்சர் அலி, திருவெறும்பூர் தொகுதி துணை அமைப்பாளர் ஜெ.சையது முஸ்தபா, எம்.என்.அஹமது ஆகியோர் மனுக்களை அளித்தனர்.  மேலும்,  விவசாய சங்கத்தினர், வியாபாரிகள், வணிகர்கள், மருத்துவர்கள், இன்ஜினியர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், மோட்டார் வாகன ஓட்டுனர், உரிமையாளர்கள், கட்டிட கலைஞர்கள்  உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்  தங்களது  கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும்  நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் 150க்கும் மேற்பட்டோர் தங்களது கருத்துகள் அடங்கிய மனுக்களை வழங்கினார்.