டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் தொடர்பு! ஆதாரம் இருப்பதாக பீதி கிளப்பும் அமைச்சர்…..

சென்னை:

மிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில், முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு, அந்தியூர் செல்வாராஜ் போன்றோருக்கு  தொடர்பு உள்ளது, அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ள என்று  அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு குறித்து இதுவரை 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், தினசரி புதுப்புதுத் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று சிங்காரவேலரின் 161ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அவரது உருவபடத்துக்கு, தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, பாண்டியராஜன், சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  2006-2011ம் திமுக ஆட்சியின்போது நடைபெற்ற  டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அப்போதைய அமைச்சர்கள் கே.என்.நேரு, அந்தியூர் செல்வராஜ், மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் போன்றோர், சிலருக்கு பணி வழங்குவது தொடர்பாக பரிந்துரை கடிதங்கள், அப்போதைய டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது சிக்கியிருப்பதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு சிஏஏ சட்டத்தால், எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமாரின் அதிரடி குற்றச்சாட்டு திமுகவினரிடமும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.