திமுக முன்னாள் எம்.பி. அக்கினி ராஜ் காலமானார்: உடல்நலக்குறைவால் உயிர் பிரிந்தது

மதுரை: திமுக முன்னாள் எம்.பி. அக்கினி ராஜ் காலமானார். அவருக்கு வயது 87.

திருப்பரங்குன்றம் அருகில் உள்ள திருநகரில் வசித்து வந்தார் திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் அக்கினி ராஜ். பட்டதாரியான அவர், கடந்த 1964ம் ஆண்டு ஆட்சிமொழி பிரிவு சட்ட நகலை எரித்த மொழிப்போர் தியாகி.

திமுகவின் மீது கொண்ட பற்றால் அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்து பணியாற்றினார். 1967ல் சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதே காலகட்டத்தில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட செயலாளராகவும் பணியாற்றினார்.

திருப்பரங்குன்றம் யூனியன் சேர்மன் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர். 1998ல் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர். முத்துலட்சுமி என்ற மனைவியும், முத்தரசு, செந்தில், கருணாநிதி, சரவணன் ஆகிய 4 மகன்களும் அவருக்கு உள்ளனர்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று காலமானார். அவருடைய நல்லடக்கம் அவருடைய சொந்த கிராமமான கூத்தியார்குண்டுவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.