சென்னை,

ன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

திமுக பொதுச்செயலாளர்  அன்பழகன், “திமுக செயல் தலைவராக ஸ்டாலின் ஏக மனதாக தேர்வு செய்யப்படுகிறார். அவர் தற்போது வகித்துவரும் பொருளாளர் பதவியையும் கூடுதலாக கவனிப்பார்” எனத் தெரிவித்தார்.

பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

16 தீர்மானங்கள் விவரம்:

1. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற திடீரென அறிவித்து கோடிக்கணக் கான ஏழை – எளிய மக்கள் மீது பொருளாதாரப் போர் தொடுத்திருக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை இந்தப் பொதுக்குழு மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

2. தமிழகத்தில் கைப்பற்றப்பட்ட கோடிக் கணக்கான பணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் இந்தப் பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

3. மத்திய அரசுப் பணியாளர்களுக்கு நிகரான ஊதியம் மாநில அரசு ஊழியர்களுக்கும் கிடைக்கும் வகையில் தமிழக அரசு மேலும் தாமதிக்காமல் உடனடியாக ஊதியக்குழுவினை நியமித்திட வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

4. தமிழகத்தை “வறட்சி மாநிலமாக” அறிவித்து, உரிய நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

5. சென்னை மாநகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைப் பெருமளவு குறைத்திடவும், சென்னை துறைமுகத்தின் பணிகள் தடையின்றி நடைபெறவும் பெரிதும் உதவிடும் இத்திட்டம் விரைந்து நிறைவேறிட மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

6. நீட் தகுதித் தேர்வு முறையை ரத்து செய்து, அந்தந்த மாநில அரசுகள் தாங்கள் ஏற்கனவே கடைப்பிடித்து வந்த மாணவர் சேர்க்கை முறையையே மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

7. மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை ‘தேசியக் கல்விக் கொள்கை’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தி, மாநில உரிமைகளில் ஊடுருவி மாநிலங்களின் கல்வித் திட்டத்திற்கு மூடுவிழா நடத்த முற்படும் பிற்போக்கு முயற்சியை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கை விட்டு விட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

8. ஆண்டுதோறும் கச்சத் தீவு புனித அந்தோணியார் கோவிலில் நடைபெறும் திருவிழாவில் கலந்துகொண்டு வழிபாடு செய்துவருவதைப் போல், இந்த ஆண்டும் எவ்வித எண்ணிக்கை உச்ச வரம்பும் இன்றி, விருப்பமுள்ளோர் அனைவரும் சென்று வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

9. தமிழக மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதையும், படகுகளைக் கைப்பற்றுவதையும் தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை இந்தப் பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

10. லாபத்தில் இயங்கும் சேலம் இரும்பாலை நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்று, யாரோ ஒரு முதலாளி லாபமடைந்து கொழுக்கவும், பொதுத் துறை நிறுவனம் மக்கி மடியவும் ஏற்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், உடனடியாக மத்திய அரசு இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

11. தமிழக அரசு அறிவித்துள்ள கரும்புக்கான கொள்முதல் விலையை, உடனடியாக மறு பரிசீலனை செய்து, டன் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 3,500 ரூபாய் என்ற அளவிற்காவது கிடைத்திடும் வகையில் அறிவிக்க முன்வரவேண்டுமென்று இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.

12. வர்தா புயலின் சீற்றத்தால் வீடுகளை இழந்ததோடு, சாலையோரங்களில் செய்துவந்த தொழிலையும் இழந்து தவிக்கும் ஏழையெளிய மக்களுக்கும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும் உரிய இழப்பீடும் நிவாரணமும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

13. சுதந்திரமாகவும், நேர்மையாகவும் விரைவாக தேர்தல்களை நடத்தி, உள்ளாட்சி ஜனநாயகத்தைப் பாதுகாத்திட மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தப்படுகிறது.

14. பொது விநியோகத் திட்டக் குளறுபடிகளைக் களைய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

15. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதிக்க வேண்டும்.

16. ஊழல் செய்வோரைத் தண்டிக்க லோக்பால், லோக் ஆயுக்தா சட்டங்களை நடைமுறைப்படுத்துக.