திமுக பொதுக்குழு: தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் 26-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம்..!

சென்னை: 

திமுக பொதுக்குழு கூட்டம் வருகிற 28ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வரும் 26ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று திமுக தலைமை கழகம் அறிவித்து உள்ளது.

திமுகவின் பொதுக் குழுக் கூட்டம் வருகிற 28ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்து உள்ளார். பொதுக்ழு கூட்டத்தில்  தேர்ந்தெடுக் கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும், கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்றும் அன்றைய தினம் தணிக்கைக் குழு அறிக்கை தாக்கலாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காலியாக உள்ள திமுக தலைவர் பதவி மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த பதவிகளுக்கு   போட்டியிட விரும்புவோர் வரும் 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் என கட்சியின் பொதுச் செலயாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி

தலைவர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் :  ஆகஸ்டு 26-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை

வேட்புமனுவினை திரும்பப் பெறும் நாள்: ஆகஸ்டு 27-ம் தேதி பிற்பகல் 1.30 மணி வரை 

வேட்புமனு பரிசீலனை:  ஆகஸ்டு 27-ம் தேதி மாலை 5 மணி. அதைத்தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல்:  ஆகஸ்டு 28-ம் தேதி (பொதுக்குழு நடைபெறும் நாள்)

இவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.