சென்னை:

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் 98வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவரது வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து கூறினார்.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வயது முதிர்வு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவருக்கு இன்று 98வது பிறந்தநாள். இதையொட்டி, அவருக்கு கட்சியின் முன்னணியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலி  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள க.அன்பழகனின் வீட்டிற்கு சென்ற மு.க ஸ்டாலின் அவருக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.அன்பழகன், துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, செல்வம், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, மக்களவை எம்.பி, கலாநிதி உள்ளிட்ட நிர்வாகிகளும் க.அன்பழகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின்,

க. அன்பழகன் கட்சியின் பொதுச்செயலாளர் மட்டுமல்ல, எனது பெரியப்பா என்று குறிப்பிட்டுள் ளார். மேலும் நூற்றாண்டு கடந்த திராவிட இயக்கத்தின் முதுபெரும் தந்தை, இனமானம் மற்றும் தன்மானம் ஊட்டிய தாய், இயக்கம் நடத்த வழிகாட்டிய அண்ணன்! 98வது பிறந்தநாளில் பேராசிரியர் பெருந்தகையே, வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன்!

திமுக இளைஞரணியில் எனது பணிகளை அலசி – பாராட்டு என்கிற மதிப்பெண்ணை வழங்கியவர் பேராசிரியர் அவர்கள்; கழக மாணவனாக நான் பெற்ற முதல் வெற்றிச் சான்றிதழ் அதுவே; அதனை எப்போதும் நினைவுகளில் பெருமையாக தேக்கி வைத்திருக்கிறேன்”

எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதனை அடுத்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அன்பழகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைகோ சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.