பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவு: திமுக சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!

சென்னை:

பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவையொட்டி,  திமுக சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மூத்த அரசியல் தலைவரும் திமுக பொதுச்செயலாளருமான க.அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 1 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 98. கடந்த 24 ஆம் தேதி சென்னை உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல் திமுக கொடி போர்த்தப்பட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவையொட்டி திமுக சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சி சார்பிலான நிகழ்ச்சிகள் அனைத்தும் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அண்ணா அறிவாலயத்தில் திமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.