திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவு: அதிமுக புகழஞ்சலி

சென்னை:

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன்  திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து விலகாத மூத்த அரசியல்வாதி; என அவரது மறைவுக்கு அதிமுக  புகழஞ்சலி செலுத்தி உள்ளது.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என அதிமுக சார்பில்  ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

அன்பழகன் மறைவு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

“தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியும், திமுகவின் பொதுச் செயலாளருமான க.அன்பழகன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மறைந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

க.அன்பழகன் தனது இளம் வயதிலேயே அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர். கருணாநிதியின் அரசியல் பயணத்தின் நெடுகிலும் உற்ற தோழராகவும், திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து விலகாத உறுதி மிக்க மூத்த அரசியல்வாதியாகவும் விளங்கியவர். இவர் திமுகவில் ஆரம்ப காலம் முதலே முக்கிய பங்கு வகித்தவர் என்ற பெருமைக்குரியவர்.

க.அன்பழகன் 1957-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக முதன்முறையாக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்தவர். க.அன்பழகன் 43 ஆண்டுகளாக திமுகவின் பொதுச் செயலாளராகவும். அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தமிழ்நாட்டு அரசியலில் தடம் பதித்து வந்தவர். ஒன்பது முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர். இவர் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் ஆகிய பதவிகளில் திறம்பட பணியாற்றியவர்.

அரசியல்வாதி, ஆசிரியர், மேடை பேச்சாளர், எழுத்தாளர், தொழிற்சங்கவாதி, சமூக சீர்திருத்தவாதி போன்ற பல பரிமாணங்களை கொண்டு தனது பன்முகத் தன்மையை வெளிப்படுத்தியவர்.

திமுகவின் பொதுச் செயலாளர் க.அன்பழகனின் மறைவு தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன்”

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.