சென்னை

திமுக பொதுச் செயலாளர் க அன்பழகன் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று நள்ளிரவு காலமானார்.

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான க அன்பழகன் சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.  தற்போது 97 வயதாகும் அன்பழகன் கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக உடல்நலம் குன்றி இருந்தார்.   அவருக்குச் சென்ற மாதம் 24 ஆம் தேதி கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.   அதனால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடந்த சில நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அன்பழகனை திமுக தலைவர் மு க ஸ்டாலின் அடிக்கடி சென்று பார்த்து வந்தார்.  நேற்று இரவு அன்பழகனின் உடல்நிலை மோசமடைந்ததாக தகவல்கள் தெரிவித்தன   அவரை நேரில் சென்று பார்த்த ஸ்டாலின் வயது மூப்பு காரணமாகச் சிகிச்சையை அவர் உடல் ஏற்கவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு அன்பழகன் உயிர் பிரிந்தது   இதை அப்பல்லோ மருத்துவமனை நள்ளிரவு 1 மணிக்கு உறுதி செய்தது.   அவரது மறைவையொட்டி திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுவதாகக் கட்சி தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.   அத்துடன் திமுக கொடி 7 நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்க விடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.