சென்னை: ஸ்பெஷல் டிஜிபியாக ராஜேஷ் தாசை நியமித்து இருப்பது ஒரு விபரீத விளையாட்டு என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது:  கூடுதல் டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பதவி உயர்வு அளித்து – சட்டம் ஒழுங்கு ஸ்பெஷல் டிஜிபியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்திருப்பது, உச்சநீதிமன்றத்தால் பிரகாஷ் சிங் வழக்கில் வழங்கப்பட்ட 7 கட்டளைகளுக்கும், தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் 2013-க்கும் முற்றிலும் எதிரானதாகும்.
தமிழகத்தில் ஏற்கனவே சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக – அதாவது, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநராக திரிபாதி ஐபிஎஸ் இரண்டு ஆண்டுகளுக்கு (ஜூன் 2021 வரை), பிரகாஷ் சிங் வழக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, அவரது அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் – தேர்தல் காலப் பணிகளில் “எடப்பாடிக்கு” எடுபிடியாக இருக்க வேண்டும் என்பதற்காக – போலீஸ் தலைமையகத்தில் இன்னொரு டிஜிபி அந்தஸ்துள்ள அதிகாரியை சட்டம் ஒழுங்குப் பணிகளில் நியமித்திருப்பது, ஒட்டுமொத்த காவல்துறை நிர்வாகத்தையே சீரழிக்கும் மிக மோசமான முன்னுதாரணம் ஆகும்.
இரட்டைத் தலைமையால் அதிமுகவிற்குள் நடக்கும் கூத்துகள், டிஜிபி அலுவலகத்திலும் அரங்கேறட்டும்- அங்கும் நாமும் ஓ.பி.எஸ்ஸும் அடித்துக் கொள்வது போல் – அதிகாரிகளுக்குள் அடித்துக் கொள்ளட்டும் என்ற இந்த விபரீத விளையாட்டு தமிழகக் காவல்துறையின் தலைமைப் பண்பை அடியோடு நாசப்படுத்தி விடும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
இரண்டு டிஜிபிகளுக்கு என்னென்ன பொறுப்பு?  தமிழ்நாட்டில் உள்ள காவல்துறை அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருக்கும் தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநருக்குக் கட்டுப்பட வேண்டுமா? அல்லது அதே தகுதியில் டிஜிபியாக இருக்கும் ஸ்பெஷல் டிஜிபிக்கு கட்டுப்பட வேண்டுமா?
ஆகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று அதிமுகவிற்குள் உருவாக்கியுள்ளது போல், காவல்துறை தலைமையகத்தில் டிஜிபி – ஸ்பெஷல் டிஜிபி என்று உருவாக்கியுள்ளதைத் திரும்பப் பெற்று – பிரகாஷ் சிங் வழக்கின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை மதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் துரைமுருகன் கூறி உள்ளார்.