சென்னை:

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவர்  கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக  கூறப்படுகிறது.

98 வயதாகும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம்  24ந்தேதி இரவு 8.15 மணிக்கு  சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர் சிகிச்சையில் இருந்து வந்தவரின்  உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்று கூறப்பட்டது. கடந்த சில நாட்களாக அவர் கண் திறக்காமல், அவரது உடல்நிலை கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், செயற்கை சுவாசக் கருவி வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 8 நாட்களுக்கும் மேலாக அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட முக்கிய பிரதிநிதிகள்  அப்போலோ சென்று அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.