சென்னை:

டைபெற்று முடிந்த 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று நினைத்திருந்த திமுகவுக்கு, தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தை அளித்துள்ளன. இதையடுத்து, ஆட்சியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற நோக்கில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் மூலம் தூண்டில் வீசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

திமுக தூண்டிலில் மீன்கள் சிக்கப்போகிறதா அல்லது. தூண்டிலில் உள்ள  புழுக்களை தின்றுவிட்டு மீன்கள் எஸ்கேப்பாக போகிறதா என்பது விரைவில் தெரிய வரும்.

ஜூன் 3-ம் தேதி கருணாநிதி பிறந்த நாள். அன்று நமது தலைவரை (ஸ்டாலின்) தமிழக முதல்வர் நாற்காலியில் அமர வைக்கும் வாய்ப்பு உள்ளது என்று தேர்தல் பிரசாரங்களில் திமுக தலைகளும், ஸ்டாலினும் பேசி வந்த நிலையில், தற்போது அதற்கான வாய்ப்பு பறிபோய் உள்ளது. இருந்தாலும் ஆட்சியை கைப்பற்றியே தீர வேண்டும் என்ற வேட்கையில் திமுக தீவிரமாகவும், ரகசியமாகவும் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

ஜெ.மறைவுக்கு பின்னர் எடப்பாடி தலைமையில் தொடரும் அதிமுக அரசு நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையிலேயே தொடர்ந்து வருகிறது. மோடி அரசின் ஆதரவுடன் மீதமுள்ள 2 ஆண்டு களையும் கடந்துவிட முயற்சிக்கிறது. தற்போது அதற்கான அறிகுறியும் தென்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இடம் பிடித்து, எடப்பாடி ஆட்சியை காலிசெய்துவிட்டு ஆட்சி கட்டிலில் அமரலாம் என்று திமுக கணக்கு போட்டது. அது நிறைவேற முடியாத நிலையில், சட்டமன்ற இடைத்தேர்தலிலாவது,  முழு வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரலாம் என்ற மனக்கோட்டையும் சரிந்து விட்டது.

இந்த நிலையில், இன்று திமுக எம்எல்ஏக்கள் பதவி பிரமாணத்தை தொடர்ந்து செய்தியாளர்களி டம் பேசிய ஸ்டாலின் வெயிட் அன்ட் சி என்று கூறிய வார்த்தையில் பல்வேறு அர்த்தங்கள் புதைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அரசுக்கு எதிராகவோ, சபாநாயகருக்கு எதிராகவோ  தீர்மானம் கொண்டுவரப்படுமா என்ற கேள்விக்கு,  `சட்டமன்றம் கூடும் தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. தேதி அறிவித்ததும் அதுகுறித்து முடிவெடுப்போம்’ என்று ஸ்டாலின் கூறியதன் பின்னணியில் ரகசிய திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 234 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் ஆட்சி அமைக்க 118 சட்ட உறுப்பினர்கள் ஆதரவு தேவை. எடப்பாடி அரசுக்கு ஏற்கனவே 113 உறுப்பினர்கள் ஆதரவு இருந்த நிலையில், தற்போது 9 உறுப்பினர்கள் கிடைத்துள்ளதால், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 121ஆக உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக அவரது ஆட்சிக்கு தற்காலிகமாக ஆபத்து விலகியுள்ளது.

அதைவேளையில் திமுகவுக்கு ஏற்கனவே  97 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், தற்போது 13 பேர் கிடைத்துள்ளனர். இதன் காரணமாக  110 சட்டமன்ற உறுப்பினர்களே உள்ளனர். பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்கள் தேவையான நிலையில்,  மேலும் 8 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மேலும் அவர் எதிர்பார்க்கும் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ், தமீம் அன்சாரி, தணியரசு போன்றோர் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பார்களா என்பதும் கேள்விக்குறியே.

தமிழகத்தின் அரசியல் நிலவரம் இப்படி இருக்கையில், ஆட்சியை கைப்பற்றவோ, ஆட்சியை கவிழ்க்கவோ  ஸ்டாலின் தீவிரமாக முயற்சி செய்து வருவது பல்வேறு யூகங்களை எழுப்பி உள்ளது.

அதிமுகவில் இருந்த திமுக விற்கு தாவிய செந்தில்பாலாஜி போன்றவர்கள் மூலம் அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்களை ஓரம்கட்ட திமுக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படு கிறது. இதற்கான அசைன்மெண்ட் திமுக மாவட்டச் செயலாளர்களிடம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் ரகசிய தகவல்கள் கசிந்து வருகின்றன.

ஆனால், திமுகவின் ஆசைக்கு அதிமுக எம்எல்ஏக்கள் பலிகடா ஆவார்களா என்பது கேள்விக் குறியே. ஏற்கனவே டிடிவி தினகரன் இதுபோல ஆசை வார்த்தைகளை கூறி ஒருசிலரை தனது பக்கம் இழுத்த நிலையில், அவர்களின் கதி அதோ கதியானது அனைவரும் அறிந்ததே. தற்போதைய லோக்சபா மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளிலும் டிடிவி தினகரன் கட்சி ஓரங்கட்டப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக மாற்று கட்சிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் தாவுவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்விகளை எழுப்பி உள்ளது. தற்போதைய நிலையில்,   மத்தியில் மீண்டும் அதிமுக ஆதரவு கட்சியான பாஜகவே ஆட்சியை பிடித்துள்ளது. இப்படி இருக்கும்போது, அதிமுகவில் இருந்து அவ்வளவு எளிதில் யாரும் வெளியேற மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது.

ஆனால், அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் அல்லது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக செயலாற்றி வரும் திமுக தலைமை,  திமுக மாவட்ட செயலாளர்கள் மூலம் அதிமுக எம்எல்ஏக்களுக்கு தூண்டில் போட்டு வருகிறத.  இதில் வெற்றி பெற்றால், அடுத்த 5 வருடத்திற்கு திமுக ஆட்சிதான் என்று உறுதி கூறப்பட்டு இருப்பதாகவும் உறுதிப்படாத தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், எடப்பாடி ஆட்சியை கவிழ்த்துவிட்டு, உடனே சட்டமன்ற தேர்தலை சந்தித்தால், அதை மக்கள் விரும்ப மாட்டார்கள், திமுகமீதுதான் அதிருப்தி ஏற்படும் திமுக மூத்த தலைவர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.

தற்போதைய திமுகவில், ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தலையீடு அதிகமாக உள்ளதாக திமுக மூத்த தலைவர்கள் வருத்தத்துடன் உள்ள நிலையில், ஸ்டாலின் ஆசைக்கு மா.செ.க்கள் உதவு வார்களா என்பதும்  கேள்விக்குறிதான்.

இதற்கிடையில் திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் டில்லியில் முகாமிட்டு, எடப்பாடி அரசுக்கு எதிராக பாஜகவின் முக்கிய தலைவர்களை ரகசியமாக சந்தித்து பேசி வருவதாகவும், எடப்பாடி அரசுக்கு எதிராக காய் நகர்த்தி வருவதாகவும்  தலைநகர வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது எந்த அளவுக்கு பலன் அளிக்கும் என்பது தெரியவில்லை.

கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3ந்தேதி தமிழக முதல்வராக பதவி ஏற்கலாம் என கனவு கண்ட ஸ்டாலினின் கனவு கலைந்துவிட்ட நிலையில், அடுத்தமாதம் நடைபெற இருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, தங்களது வலிமையை காட்ட திமுக காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது.  அதற்குள் ஸ்டாலின் எதிர்பார்த்தபடி திமுக மா.செ.க்களின் தூண்டிலில் அதிமுக மீன்கள் சிக்கி விட்டால்…. ஸ்டாலின் வெயிட் அன்ட் சிக்கு பதில் கிடைக்கும்… இல்லையேல்….. ..?

பொறுத்திருந்து பார்ப்போம்…