ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் இன்று கூடுகிறது

சென்னை:

 திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் இன்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கூடுகிறது.

இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இன்றைய கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், திமுக  பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள், அமைப்புச்செயலாளர்கள் உள்பட 26 உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அறிவிக்கப்பட இருக்கும் திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கட்சியினர்  தொகுதி வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், பிரச்சார யுக்திகள், கூட்டணி நிலைப்பாடு குறித்த விவரங்கள் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தற்போது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான வியூகங்களை வகுத்து வரும் நிலையில், திமுகவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்துகிறது.