சென்னை: ரெய்டு பூச்சாண்டிக்கெல்லாம் திமுக பயப்படாது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை சபரீசன் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர். மேலும் அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் மோகனின் வீட்டிலும், ஜிஸ்கொயர் நிறுவன உரிமையாளர் பாலா வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.  இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தேர்தலையொட்டி கடந்த சில நாட்களாக, தேர்தல் பறக்கும் படையினர், வருமான வரித்துறையினர் ‘ வேட்பாளர்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் அதிடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இதில், திமுக, அதிமுக, மநீம, தமாபா உள்பட பலரது ஆதரவாளர்கள் வீட்டில்  இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்தனர்.

ஏற்கனவே திருவண்ணாமலையில் திமுக மூத்த தலைவர் எ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். இப்போது ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்,  அரசியல் உள்நோக்கத்துடன் வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது என்று குற்றம் சாட்டினார்.  மேலும், ரெய்டு போன்ற பூச்சாண்டிக்கெல்லாம் திமுக பயப்படாது என்றவர் ரெய்டுக்கெல்லாம் பயப்பட்டு இருந்தால் திமுக என்றோ செத்து புல் முளைத்திருக்கும் என ஆவேசமாக கூறினார்.