புதுச்சேரி:

புதுச்சேரி முன்னாள் திமுக முதல்வர்  ஜானகிராமன் (வயது 78 ) வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், கழக முன்னணியினிர் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “எளிமைக்கு இலக்கணம் தேடினால் திரும்பிய பக்கமெல்லாம் தெரிகிற உருவம் புதுவை ஆர்.வி.ஜானகிராமன்தான்” என்று தலைவர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்டவர் என்று புகழாரம் சூட்டி உள்ளார்.

ஆர்.வி.ஜானகிராமன்

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 1996ம் ஆண்டு மே 26 முதல் 1999ம் ஆண்டு மார்ச் 18 வரை திமுக ஆட்சியில் இருந்தது. அப்போது  புதுச்சேரி முதல்வராக பதவி வகித்தவர்  ஆர்.வீ.ஜானகிராமன்.  இவர் புதுவையின் நெல்லித்தோப்பு என்ற தொகுதியில் இருந்து 1985 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 7 முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். தறபோது,  திமுக உயர் நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.  மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர்களில் இவரும் ஒருவர்.

வயது முதிர்வு காரணமாக  கடந்த சில நாட்களாக  உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2.30 மணிக்கு அவர் காலமானார். அவரது உடல் நாளை காலை 10.30 மணிக்கு மரக்காணம் ஆலந்தூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது மறைவிற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், புதுவை முதல்வர் நாராயணசாமி உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி

புதுச்சேரி முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான திரு ஆர்.வி.ஜானகிராமன் அவர்கள் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற அதிர்ச்சியான செய்தியறிந்து துயரமடைந்தேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதியில் 1985ல் வெற்றி பெற்ற அவர் அதே தொகுதியில் போட்டியிட்டு ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினரானவர். பொதுப்பணித் துறை அமைச்சராகவும், முதலமைச்சராகவும் பணியாற்றி புதுச்சேரி மக்களுக்காக வும், அந்த மாநில முன்னேற்றத்திற்காக அரிய பணிகளை ஆற்றியவர். “மேகலா பிக்சர்ஸில்” மேலாளராக பணியாற்றிய அவர் பள்ளிப் பருவத்திலேயே பொது வாழ்க்கைக்கு வந்தவர்.

1960 முதல் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு- புதுச்சேரி மாநிலக் கழக அமைப்பாளராக பணியாற்றி- திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்கவும், தொடர்ந்து இயக்கம் கம்பீரமாக நிற்கவும், திராவிட இயக்கத்தின் கொள்கை மாநிலத்தில் எங்கும் பரவவும் பாடுபட்டவர்- ஓடி ஓடி உழைத்தவர் திரு ஜானகிராமன் என்பதை நானறிவேன். என் மீது தனிப்பற்றும், பாசமும் வைத்திருந்த அவரை இழந்து இன்று தவிக்கிறேன்.

“எளிமைக்கு இலக்கணம் தேடினால் திரும்பிய பக்கமெல்லாம் தெரிகிற உருவம் புதுவை ஆர்.வி.ஜானகிராமன்தான்” என்று தலைவர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்டு, 2005 ஆம் ஆண்டே திரு ஜானகிராமனுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயரிய முப்பெரும் விழா விருதான “அண்ணா விருது” வழங்கி கௌரவித்தார் தலைவர் கலைஞர். பேரறிஞர் பெருந்தகை அண்ணா, பெருமதிப்பிற்குரிய அன்னை இந்திரா காந்தி அம்மையார் ஆகியோருக்கு “கார்” ஓட்டும் அரிய வாய்ப்பினைப் பெற்ற அவர், தலைவர் கலைஞர் அவர்கள் மீதான பாசத்தை தணியாத தாகம் போல் என்றும் வைத்திருந்தவர். தலைவர் கலைஞர் அவர்களின் சொல்லைத் தட்டாத கழக தொண்டராக கடைசி வரை விளங்கிய ஆர்.வி ஜானகிராமனுக்கும், தலைவர் கலைஞர் அவர்களுக்கும் இடையிலான உறவு- புதுச்சேரி மக்களுக்கு பல வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தி, மாநிலத்திற்கு பெருமை சேர்த்த ஒப்பற்ற உறவாக திகழ்ந்தது. புதுச்சேரியில் கழகத்தின் முன்னனித் தலைவரான- திராவிட முன்னேற்றக் கழகத்தின் போர்ப்படைத் தளபதிகளில் ஒருவரான திரு ஆர்.வி ஜானகிராமனை இழந்து சோகத்தில் மூழ்கியுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், புதுச்சேரி கழக தொண்டர்களுக்கும் எனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.