சென்னை:

திமுகவினர் வைத்த பேனர் விழுந்ததால் உயிரிழந்த சென்னை சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து நேற்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறிய நிலையில், இன்று அவரது தந்தையும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்,  சுபஸ்ரீ குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன்,  ரூ.5 லட்சம் நிதி உதவியும் வழங்கினார்.


கடந்த 12ம் தேதி அன்று பள்ளிக்கரனை அருகே பல்லாவரம் ரேடியல் சாலையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஒருவர் வீட்டின் திருமணத்திற்கு, சாலையின் நடுவில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அந்த சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது, பேனர் ஒன்று திடீரென விழுந்ததால், நிலைதடுமாறிய சுபஸ்ரீ ஸ்கூட்டருடன் ரோட்டில் விழுந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியது. இதன் காரணமாக சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ இறந்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,சென்னை உயர்நீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. சுபஸ்ரீயின் குடும்பத்தினரை நடிகர் கமல்ஹாசன், திமுக இளைஞர்அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை  திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மூத்த நிர்வாகிகள் டி.ஆர்.பாலு உள்பட சிலருடன்  குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் வீட்டுக்குச் சென்று, சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது திமுக சார்பில் ரூ.5 லட்சத்துக்கான நிதி வழங்கினார்.

அதைத்தொடர்ந்து,  செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், சுபஸ்ரீயின் தந்தை ரவியிடம் என்னிடம் பேசும் போது, ‘பேனரால் ஏற்படும் உயிரிழப்பு இதுவே கடைசியாக இருக்கட்டும். இது தொடரக்கூடாது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்’ என்றார். அவர் சொன்னது மறக்க முடியாது. பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு திமுக அறக்கட்டளை சார்பில் 5 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறோம்.

என்னதான் நிதி உதவி வழங்கினாலும் அவர்களுக்கு அது ஆறுதலாக அமையாது. அவரது தாய், தந்தைக்கு ஆறுதலை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கிறேன்.

பேனர் மரணம் குறித்து கேள்விப்பட்டதும், நாங்களாகவே முன்வந்து உயர்நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்தோம். அதில், நாங்கள் சட்டத்தை மீறி அனுமதி இல்லாமல் எங்கும் பேனர் வைக்கமாட்டடோம் என்று கூறி உள்ளோம் என்றவர்,  திமுக நிகழ்ச்சிகள் நடத்தும்போது, அடையாளத்திற்கு ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் அனுமதி பெற்று பேனர் வைத்து விட்டு நிகழ்ச்சியை நடத்தவேண்டும். அதைமீறி யாராவது வைத்தால் திமுக நடவடிக்கை எடுக்கும் என அறிவித்தது மட்டுமல்லாமல், நீதிமன்றத்திலும் கூறி உள்ளோம். என்னைப் பொருத்தவரை பேனர் கலாச்சாரம் இருக்கக்கூடாது  என்பதுதான் என் கருத்து.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.