வன்னியர் சமுதாய வாழ்க்கைக்காக தமது வாழ்வை தியாகம் செய்தவர் ஏ.கே. நடராஜன்: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

சென்னை: வன்னியர் சமுதாயத்துக்காக தமது வாழ்வையே தியாகம் செய்த ஏ.கே. நடராஜன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது: வன்னியர் சமுதாயத்தின் ஆலமரமாகத் திகழ்ந்து, அந்தச் சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக வன்னியர் சங்கம் துவக்கி, தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட ஏ.கே.நடராஜன் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறேன்.

அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  வன்னியர் சமுதாயம் சமூக, கல்வி முன்னேற்றம் அடைய பெரும்பாடுபட்ட ஏ.கே.நடராஜன், அச்சமுதாயத்தில் உள்ள பல குடும்பங்களை வாழ வைத்தவர்.

தமது வாழ்வையே, சமுதாய வாழ்வுக்காகத் தியாகம் செய்து வன்னியர் குரு என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், வன்னியர் சமுதாயப் பெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.