சென்னை:

னது ஆதரவாளர்களுடன் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, திமுகவில் உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்ட தங்கத்தமிழ் செல்வன்,   திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது நடக்கும் என கூறினார்.

அதிமுகவில் இருந்து விலகி டிடிவி தினகரனுக்கு ஆதரவாக களமிறங்கிய தங்கத்தமிழ் செல்வன் தனது எம்எல்ஏ பதவியை பறிகொடுத்த நிலையில், டிடிவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது திமுகவில் அடைக்கலம் புகுந்துள்ளார்.

தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வந்தவர்,  அங்கு மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இதேபோல் அவரது ஆதரவாளர்க ளும் தி.மு.க.வில் இணைந்தனர்.

கட்சியில் இணைந்தவர்களை மு.க.ஸ்டாலின் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தி யாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், ‘ஸ்டாலின் கடுமையான உழைப்பாளி. கலைஞர் இறந்த நாளில் நீதிமன்றம் சென்று மெரினாவில் இடம் பெற்றார் என்று அவரை புகழ்ந்தார்.

ஒற்றை தலைமையில் இருக்கும் கட்சிதான் திறம்பட செயல்பட முடியும், அதனால்தான் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றது  ஆளுமை மிக்க தலைவர் ஸ்டாலின் என்றும், துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடியவர், மு.க.ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது நடக்கும் என்றும் புகழ்ந்து பேசினார்.

தமிழ்நாட்டின் உரிமையை ஸ்டாலின் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை உள்ளதால், திமுகவில் இணைந்ததாகவும் தெரிவித்தார்.  திமுகவில் பதவி குறித்து என்னிடம் கேட்கிறார்கள். கேட்டுப் பெறுவது பதவியல்ல. உழைப்பை பார்த்து கொடுப்பது. என் உழைப்பை பார்த்து கொடுப்பார்கள் என நம்புகிறேன். திமுகவில் இருந்த பலரும் திமுக வந்த பின், அவர்களுக்கு திமுக நல்லதே செய்துள்ளது.

விரைவில் திமுக தலைவர் ஸ்டாலினை அழைத்து, மிகப்பெரிய மாநாட்டை நடத்துவேன் என்றவர், அப்போது அமமுகவில் இருந்து மேலும் பல நிர்வாகிகள், திமுகவில் இணைவார்கள் என்றார்.