சென்னை:

தமிழக கருத்தை கேட்காமல் மேகதாது அணை கட்டக்கூடாது என, பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில்  எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தாதது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உள்ளாட்சி நிதி, பட்டியலின மாணவர்களுக்கான மெட்ரிக்குலேசன் ஸ்காலர்ஷிப், மாநிலத்தில் செயல்படுத்தியுள்ள மத்திய அரசு திட்டங்களுக்கான நிதி, ஜிஎஸ்டியால் ஏற்பட்ட இழப்பீட்டு தொகை என ஏறக்குறைய ரூ.17,350 கோடி நிதியை தமிழகத்துக்கு வழங்காமல் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

சில தினங்களுக்கு முன் வெளிவந்த நீட் தேர்வு முடிவுகளால், தமிழ்நாட்டில் திருப்பூர், ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஸ்யா, விழுப்புரம் மோனிசா என அடுத்தடுத்து 3 மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

எடப்பாடியில் பாரதப் பிரியன் என்ற மாணவன் தற்கொலை செய்துள்ளான்.

ஆனால், மோடியிடம் எடப்பாடி பழனிசாமி அளித்த கோரிக்கை மனுவில், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு உடனே குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றுத் தாருங்கள் என வலியுறுத்தாதது வருத்தம் அளிக்கிறது.

மேகதாது அணை கட்டுவது குறித்து கர்நாடக முதல்வர் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக, கூட்டாட்சி தத்துவத்துக்கு உலை வைக்கும் வகையில் பேசிய பிறகும், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி அதைக் கண்டிக்கவில்லை.

கேரள, புதுச்சேரி முதல்வர்களுடன் கலந்து ஆலோசித்து இணைந்து ஓர் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை.

தமிழகத்தின் கருத்தைக் கேட்காமல் மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் வலியுறுத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மு.க.ஸ்டாலின், Mekthathu