ஆறுமுகசாமி ஆணைய முடிவு வெளியானால் ஓபிஎஸ், ஈபிஎஸ் கம்பி எண்ணுவார்கள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

ராணிப்பேட்டை: ஆறுமுகசாமி ஆணைய முடிவு வெளியானால் ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும் கம்பி எண்ணுவார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

ராணிப்பேட்டை மாவட்ட திமுக அவைத் தலைவர் அசோகன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய அவர் பின்னர் உரையாற்றினார்.

அப்போது, அவைத்தலைவர் அசோகன் மற்றும் மாவட்டச் செயலாளர் காந்தி ஆகியோர் கட்சிக்காக ஆற்றிய பணி குறித்து பாராட்டிப் பேசினார். இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்பாடுகளால் நாட்டில் ஜனநாயகத்திற்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது எனக் குற்றஞ்சாட்டினார்.

அவர் பேசியதாவது: மத்திய, மாநில அரசுகளுக்கு நாட்டைப் பற்றியோ நாட்டு மக்களைப் பற்றியோ எள்ளளவும் கவலை இல்லை. நாட்டில் தற்போது நிலவும் வன்முறைகள், சட்டவிரோத செயல்களுக்கு அதிமுகவும், பாமகவும் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவளித்ததே காரணம்.

மோடி அரசு இயற்றியுள்ள சிஏஏ உள்ளிட்ட சட்டத்தால் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்னைகள் எழவும் வாய்ப்புள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முதற்கொண்டு அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் லஞ்ச லாவண்யத்திலும், ஊழலிலும் கைத்தேர்ந்தவர்கள் என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் அறிந்ததே.

ஆனால், இவர்களுக்கெல்லாம் முன்னிலையில் கமிஷன் பெறுவதில் முதலிடத்தில் இருப்பது உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இதேபோல பால்வளத்துறை அமைச்சராக உள்ள ராஜேந்திர பாலாஜியின் மீதான ஊழல் வழக்குகளிலும் பல்வேறு தில்லுமுல்லுகள் அரங்கேறியுள்ளது.

ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷனுக்கான காலக்கெடு 7 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆணையத்தின் முடிவுகள் வெளியானால் ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோர் சிறையில் கம்பி எண்ணுவார்கள் என்றார்.