சென்னை:மரணக்குழியிலும் ஊழல் நாற்றமடிக்கும் தமது ஆட்சியின் மாட்சி பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாய் திறப்பாரா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், சக அமைச்சர் மரணமடையும் தருணத்திலும், அதைப் பற்றிச் சிறிதும் கவலைகொள்ளாமல்,  பதுக்கிய பணத்தை மீட்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள் என்பதைப் பத்திரிகைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் குடும்பத்தாரிடம் இருந்து, கொடுத்து வைத்த கணக்கில் வராத பணத்தை வாங்குவதிலேயே அதிமுக தலைமை குறியாக உள்ளது.அதிமுக அரசின் நடவடிக்கைகளும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளன.

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவரான கும்பகோணம் கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவரான முருகன் என்பவரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். அவர் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்துச் சாலை மறியல் செய்த மறைந்த அமைச்சரின் ஆதரவாளர்களான மேலும் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க. தலைமை கொடுத்து வைத்திருந்த பெருந்தொகைக்கு வரவு – செலவு கணக்கு முழுமையாக வந்து சேராததால், கும்பகோணத்தில் இத்தகைய மர்மக் கைதுகள் அரங்கேறி உள்ளன.ஊழலில் மூழ்கி, ஊழலில் திளைத்து, ஊழலையே முழுநேர வேலைத் திட்டமாகக்  கொண்டுள்ள அதிமுக அரசு, கொள்ளையடித்த பணத்தை மட்டுமே நம்பி தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.நூற்றுக்கணக்கான கோடிகள் சட்டவிரோத விசாரணைகள் மூலமாக கைமாறுவது குறித்து வருமான வரித்துறை, வருமான புலனாய்வுத் துறை உரிய நடவடிக்கை எடுக்குமா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.