மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு – தமிழக அரசின் அரசாணைக்கு முக ஸ்டாலின் வரவேற்பு

சென்னை:

ருத்துவப்படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக உடனடியாக அனுப்பப்பட்டது.

இந்த மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதற்கிடையில், மருத்துவபடிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில் தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’7.5% இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்புக்குரியது! இதற்கு ஏன் 45 நாட்கள் தாமதம்? ஏன் கிடப்பில் போட்டார்கள்? எதனால் திமுக போராட வேண்டியிருந்தது? அரசாணையை இந்த ஆண்டே அமல்படுத்த, உடனடியாக கவுன்சிலிங் தேதிகளை அறிவித்து மாணவர் சேர்க்கையைத் தொடங்கிடுக!’ என தெரிவித்துள்ளார்.