பெரம்பலூர்: அழகு நிலையம் நடத்தும் பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர் கைது
பெரம்பலூரில் அழகு நிலையம் நடத்தும் பெண்ணை தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் காலால் எட்டி உதைக்கும் வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பில் வெளியானதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்
பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் பிரபல தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா (வயது 35).
அதே பகுதியில் குடியிருக்கும் செல்வகுமார் (வயது 52) பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவர் தி.மு.க. பிரமுகர். பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த முன்னாள் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் ஆவார்.
இருவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்தநிலையில் செல்வகுமார் சத்தியாவின் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அவரை சரமாரியாக காலால் உதைத்து தாக்கியுள்ளார். இச்சம்பவம் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு நடந்துள்ளது.
இந்த நிலையில் சத்தியாவை, செல்வக்குமார் அடித்து உதைத்து தாக்கும் சி.சி.டி.வி. காட்சி தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. சில தொலைக்காட்சிகளிலும் இக்காட்சி ஒளிபரப்பானது. இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த வீடியோ காட்சியில், சத்தியாவை காலால் செல்வக்குமார் பலமுறை எட்டி எட்டி உதைக்கிறார். சத்தியா அடிக்காதீர்கள் அடிக்காதீர்கள் என்று கதறுகிறார். மற்ற பெண் ஊழியர்கள் இத்தாக்குதலை தடுக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
இந்த வீடியோ காட்சியை வெளியிட்டது சத்தியா என்பது தெரிய வந்தது. செல்வகுமார் தாக்கியது தொடர்பாக சத்தியா பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர் வீடியோ காட்சிகளை தொலைக்காட்சி சேனல்களுக்கு அனுப்பியுள்ளார். வாட்ஸ்அப்பிலும் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் காவலர்கள் விசாரணை நடத்தி தி.மு.க.முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடைக்குள் புகுந்து தி.மு.க. பிரமுகர்கள் யுவராஜ், ரகுபதி, கணேஷ் உள்ளிட்ட கும்பல் காசு இல்லாமல் பிரியாணி கேட்டு தர மறுத்த கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய காட்சி வைரலாக பரவியது.
அதிர்ச்சியடைந்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிரியாணி கடைக்கு சென்று பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகர்களையும் கட் சியில் இருந்து அதிரடியாக நீக்கினார்.
அடுத்ததாக கன்னியாகுமரியில் புரோட்டா கடையில் தி.மு.க. பிரமுகர் தாக்கிய சம்பவம் அதிரச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பியூட்டி பார்லரில் புகுந்து தி.மு.க. பிரமுகர் தாக்கும் சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது.