சென்னை,

குட்கா விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களுக்கு விளக்கம் கோட்டு, சட்டசபை உரிமை குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதன் காரணமாக அவர்கள் சட்டசபை நிகழ்ச்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில்,  திமுக எம்எல்ஏ.,க்களை உடனடியாக இடைநீக்கம் செய்ய முடியாது என்று அக் கட்சியின் முதன்மைச் செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத்  தலைவரு மான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது

உரிமைக்குழு 40 நாட்களுக்கு பிறகு திடீரென கூடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறதே?

எப்போது வேண்டுமானாலும் கூட்டலாம். எப்போது நினைக்கிறார்களோ அப்போது கூட்டுவார்கள்.

உரிமைக்குழு கூட்டுவது குட்கா பிரச்சனையில் திமுக மீது நடவடிக்கை வரும் என்று நினைக்கிறீர்களா?

அதற்காகத்தான் கூட்டுகிறார்கள். உரிமை மீறல் என்று கருதியிருந்தால் , உள்ளபடியே சட்டப்பேரவை முடிந்து 40 நாளைக்குள் கூட்டியிருக்க வேண்டும் அல்லவா? அதை அவர்கள் செய்யவில்லை, எப்படியாவது திமுகவை ஓரங்கட்ட வேண்டும் என்பதற்காக தூசு தட்டி இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். ஆகவே  மு.க.ஸ்டாலின் மீதும் மற்ற உறுப்பினர்கள் மீதும் உரிமை மீறல் கொண்டு வருவார்கள்.

ஒருவேளை இடைநீக்கம் என்று நடவடிக்கைக்கு போனால் உங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

அது எப்படி முடியும் , உரிமைக்குழு கூட்டி உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. இன்னார் இன்னார் மீது உரிமை மீறல் என்று சொல்ல வேண்டும். அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவர்கள் விளக்கம் இருந்தால் அதை கேட்க வேண்டும்.

உரிமைக்குழுவில் வைத்து அதை விவாதிக்க வேண்டும். அதன் பிறகு முடிவை சட்டப்பேரவையில் வைத்து அதன் மீது என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று அவை முன்னவர் தீர்மானம் கொண்டு வர வேண்டும். அதை ஏற்று சபாநாயகர் வாக்கெடுப்புக்கு விட வேண்டும். தீர்மானம் நிறைவேறியது என்று அறிவிக்க வேண்டும்.

அப்படியானால் உடனடியாக முடிவெடுக்க முடியாதுதானே?

அப்படியெல்லாம் செய்ய முடியாது. அப்போது இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்றால், அன்றே சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் இது போன்று நடந்துள்ளார்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவை முன்னவர் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி இருக்க வேண்டும்.

ஆனால் சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக நினைக்கிறார்கள் அதை வைத்து செயல்படுகிறார்கள். அதே அதிகாரத்தை எப்படி அமல்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம்.

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.