மதுரை:

ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து, அவரை கட்சி பேதமின்றி காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கெத்தாக தெரிவித்துள்ளார்.

திமுக எம்எல்ஏவும், மாவட்டச் செயலாளருமான அன்பழகன் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனியார் மருத்துவமனையின் மருத்துவரிடம் நலம் விசாரித்தார். மேலும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அன்பழகன் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் மருத்துவமனைக்கு சென்று அன்பழகன் உடல்குறித்து மருத்துவர்களிடம் விசாரித்னர்.

இந்த நிலையில், இன்று மதுரை பகுதியில் மக்களுக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் செல்லூர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,  சட்டமன்றத்தில் தங்களுடைய ஆட்சியையும், கட்சியையும் அதிகமாக விமர்சிப்பவர் அன்பழகன் என்று கூறியவர், இருந்தாலும்,  உடல்நலம் குன்றியிருக்கும் இச்சமயத்தில், நாங்கள்  ஒருதலைபட்சமாக நாங்கள்  நடந்துகொள்ள மாட்டோம், கட்சி பேதமின்றி அவரை  காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து எனவும், அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்றவர்,  திராவிட இயக்கம் கட்டிக்காக்கப்பட வேண்டும் என்பது தான் தங்களுடைய ஒரே நோக்கம் என்றும் செல்லூர் ராஜு கூறினார்.

அமைச்சர் செல்லூர் ராஜூவின் கெத்தான பேச்சு சமுக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.