திமுக எம்.ல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்… மருத்துவமனை தகவல்

சென்னை:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை  தகவல் தெரிவித்து உள்ளது.

சென்னை சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏவும், சென்னை மேற்குமாவட்ட செயலாளருமான ஜெ. அன்பழகன் கடந்த 2ம் தேதியன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான ரேலா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக நேற்று மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. அதில்,  80% வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் திமுகவில் பரபரப்பு ஏற்பட்டது. திமுக தொண்டர்களும் கவலையுடன் காணப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதன்படி,  வென்டிலேட்டர் மூலம் 80% ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில், 67% மட்டுமே இன்று தேவைப்படுவதாக தெரிவித்து உள்ளது.

அன்பழகன்  உடல்நிலை முன்னேறி வருவதை அறிந்த திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

You may have missed