திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் மகன் மரணம்: கே.எஸ்.அழகிரி இரங்கல்…

சென்னை: திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் மகன் மரணத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்  கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மாநகர முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன்  அவர்களது 34 வயது நிரம்பிய மகன்  அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மாநகர முன்னாள் மேயருமான திரு. மா. சுப்பிரமணியன் அவர்களது 34 வயது நிரம்பிய மகன் திரு. அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்று பொதுநல ஊழியராகவும், மக்கள் சேவையில் தம்மையே அர்ப்பணித்துக் கொண்ட திரு. மா. சுப்பிரமணியன் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிற இந்த இழப்பு ஈடு செய்யவே முடியாத பேரிழப்பாகும்.

தமது மகனை இழந்து வாடுகிற எளிமையின் சின்னமான திரு. மா. சுப்பிரமணியன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில்கூறியுள்ளார்.