எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்க திமுக முடிவு….தமிழக அரசியலில் பரபரப்பு

சென்னை:

திமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அக்கட்சியின் செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அனைத்து திமுக எம்எல்ஏ.க்களும் கலந்து கொண்டனர்.


புதிதாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி நாளை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். இந்த சமயத்தில் திமுக எம்எல்ஏ.க்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

முடிவில், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக.வின் இந்த முடிவு அதிமுக.வின் சசிகலா தரப்புக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக 11 அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இந்த நிலையில் திமுகவும் எதிர்ப்பது அதிமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர கூவத்தூரில் அடைத்துவைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ.க்களில் 18 பேர் எடப்பாடிக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நாளை நடக்கும் பலப்பரீட்சையில் எடப்பாடி தப்புவாரா என்பது கேள்விகுறியாகியுள்ளது.