சென்னை: தமிழக சட்டமன்றத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் குட்கா எடுத்துச்சென்றது தொடர்பாக சபாநாயகர் விளக்கம் கேட்டு அனுப்பியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் மீது திமுக குற்றம்சாட்டியது. இன்றும் விசாரணை தொடர்கிறது.

கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 19-ந்தேதி நடைபெற்ற தமிழக  சட்டமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக கூறி அதை சபைக்கு கொண்டு வந்து காட்டினர். இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். இது  அவை உரிமையை மீறிய செயல் என கூறி உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து , எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.  இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், வழக்கு  மீண்டும் விசாரணைக்கு  வருகிறது.

தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பினரும் ஆவணங்களை சமர்ப்பிக்க ஏதுவாக மேலும் இரண்டு நாட்கள் விசாரணைக்கு ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது.

அதையடத்து நேற்று நடைபெற்ற  விசாரணையின்போது,  ஸ்டாலின் தரப்பில் ஆஜராக வழக்கறிஞர் கள், குட்கா எளிதில் கிடைப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வரவே சட்ட மன்றத்துக்கு குட்கா பொருட்களை எடுத்துச் செல்லப்பட்டது என்றும், இதில் உரிமை மீறல் இல்லை என்றும், சபாநாயகருக்கு எந்த அவமதிப்பும் செய்யவில்லை எனவும்  தெரிவிக்கப்பட்டது.

திமுகவுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், 21 எம்.எல்.ஏ.க்களில் இருவர் – ஜே.அன்பழகன் மற்றும் கே.பி.பி சாமி ஆகியோர்  உயிருடன் இல்லை என்று, அவர்களின் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்தனர். அதுபோல, தற்போது   திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட் டுள்ள  குகாசெல்வம்  சார்பாக தனி வழக்கறிஞரை  வைத்துக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து வாதங்கள் தொடர்ந்தன.

அப்போது, எம்.எல்.ஏ.க்கள், தடை விதிக்கப்பட்ட குட்கா சந்தையில் தாராளமாக  கிடைப்பதை சுட்டிக்காட்டும் வகையிலேயே அவ்வாறு நடந்துகொண்டதாகவும்,  குட்கா போன்ற போதை  பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளின் சாக்கெட்டுகள் மற்றும் புகைப்படங்களை காட்சிப்படுத்தியிருந்ததை சுட்டிக்காட்டி, விதிகளின்படியே அவற்றை சட்டமன்றத்தில் காண்பிக்கப் பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இது தொடர்பாக .முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியின் தூண்டுதலின் பேரிலேயே, இந்த விவகாரத்தை, சபாநாயகர் உரிமை மீறல் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும் வாதிடப் பட்டது,

ஆனால், இதன் காரணமாக  அரசாங்கத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது ஆனால் பதவியில் இருக்கும் அரசாங்கத்திற்கு அவமதிப்பைக் கொண்டுவருவதற்கான கூற்றுக்கள் சபை யின் சலுகையை மீறுவதாகக் கருத முடியாது என்று வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர் சார்பு வழக்கறிஞர்,  சட்டமன்ற விதிகளின்படி, சபாநாயகர், அனுமதியின்றி இத்தகைய பொருட்களைக் சபையில் காட்ட முடியாது என்றும்,  அவை விதிகளை மீறிய செயல்பட்டதால், இதை உரிமை மீறல் குழு விசாரிக்க அனுப்பப்பட்டது என்று கூறினார்.

ஆனால், மனுதாரர் தரப்பில், எடப்பாடி அரசின் பெரும்பான்மை நிரூபிக்கும் விவகாரத்தில், வெற்றி பெறுவதற்காகவே சபாநாயகர் இந்த நடவடிக்கை எடுத்ததாகவும்,  இது முன்கூட்டியே திட்டமிடப் பட்டது, அரசை காப்பாற்றும் நோக்கிலேயே அவரது நடவடிக்கைகள் இருந்ததாகவும் வாதிடப்பட்டது.

இதையடுத்து, வழக்கின் விசாரணை இன்றும் தொடர்ந்து நடைபெறும் என அறிவித்து நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.